
கோத்தா கினாபாலு, செப்டம்பர்-11,சபா, கினாபாலு மலையில் ஏறும் போது கீழே விழுந்து காயமடைந்த 46 வயதான குரோஷிய நாட்டு மலையேறி, 5 நாட்கள் நீடித்த மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு பாதுகாப்பாகக் கீழே அழைத்து வரப்பட்டார்.
செப்டம்பர் 6-ஆம் தேதி மலைையேற்றத்தின் போது விபத்தில் சிக்கிய Mauro Persic என்பவரை மீட்பதற்காக, தீயணைப்புப் படை, சபா பூங்காக்கள் ஊழியர்கள், மலை வழிகாட்டிகள் மற்றும் போலீஸார் உட்பட 43 பேரடங்கிய மீட்புக் குழுவினர் கரடுமுரடான மலைப்பாதையில் போராடி அவரை மீட்டனர்.
கால் மற்றும் விலா எலும்புகளில் காயமடைந்த அந்த மலையேறி, Timpohon Gate தளத்தை பாதுகாப்பாக வந்தடைந்தார்.அங்கிருந்து அவர் சிகிச்சைக்காக ரானாவ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
மீட்புக் குழுவினர் அனைவரும் பாதுகாப்பாகத் திரும்பியதைத் தொடர்ந்து, இந்த மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக முடிவுக்கு வந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.



