
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-12 – The RISE எனப்படும் 15-ஆவது உலகத் தமிழர் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு ‘வா தமிழா’ என்ற கருப்பொருளோடு மலேசியாவில் நடைபெறவிருக்கிறது.
இது இங்கு நடப்பது மூன்றாவது முறையாகும். டிரா மலேசியா (DHRRA Malaysia) மற்றும் எழுமின் எனப்படும் The Rise குழுமத்தின் ஏற்பாட்டில் ஆகஸ்ட் 15 முதல் 17 வரை பினாங்கு, பட்டவொர்த் PICCA மாநாட்டு மண்டபத்தில் இந்த 3 -நாள் மாநாடு நடைபெறுகிறது.
இந்தியா, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மத்தியக் கிழக்கு நாடுகள் என சுமார் 30 நாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், திறனாளர்களோர் ஆகியோர் பங்கேற்கவிருப்பதன் வழி, உலகத் தமிழர்களின் மாபெரும் ஒன்றுகூடலாக இது விளங்குவதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் The Rise Malaysia அமைப்பின் தலைவருமான டத்தோ சரவணன் சின்னப்பன் தெரிவித்தார்.
மலேசியாவைச் சேர்ந்த 120 பேர் உட்பட இதுவரை 650 பங்கேற்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்க பதிந்துகொண்டுள்ளனர். இது வெறும் வர்த்தக தொடர்பு மாநாடு மட்டும் அல்ல எனக் குறிப்பிட்டவர், இம்முறை மலேசியாவில் மாநாட்டை நடத்துவற்கான காரணம் குறித்து விளக்கினார்.
மலேசியத் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள் தங்களின் வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் இம்மாநாடு ஒரு களமாகவும் தளமாகவும் அமையும். அவ்வகையில் பெரிய வர்த்தகம் செய்வோர் முதல் சிறு வியாபரிகள் வரை இதில் கலந்துகொள்ளலாம் என்றார் அவர்.
மற்ற மாநாடுகளை விட இந்த RiSE மாநாடு எந்த வகையில் தனித்து நிற்கிறது என சரவணனிடம் கேட்டபோது….மாநாட்டில் பல மில்லியன் கணக்கில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் எனக் கோடிக் காட்டிய அவர், மாநாடு அடைய விரும்பும் நோக்கம் குறித்தும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
எனவே, புதிதாக தொழில் தொடங்கத் திட்டமிட்டுள்ளோர், முதலீட்டு வாய்ப்புகளைத் தேடி வருவோர், வர்த்தச் சமூகத்துடன் கலந்துரையாட விரும்புவோர் இம்மாநாட்டில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.
மலேசிய இந்தியர்கள், வேலை தேடும் சமூகம் என்ற நிலையிலிருந்து வேலைகளை உருவாக்கும் சமூகமாக உயர இந்த உலகத் தமிழர் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் மாநாடு அடித்தளமாக அமையுமென எதிர்பார்க்கபடுகிறது.