
கோலாலம்பூர், அக்டோபர் 6 – அம்பிகையை வழிபடும் நவராத்திரி விழா பல இடங்களில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அப்படியாக, கோயில்களில் மட்டுமல்லாது வீடுகளிலும் கொலு வைத்து ஒன்பது நாள் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபாடு செய்து வருவது வழக்கமாகும்.
அதில், தனிச்சிறப்பாகத் தேவியின் ஒன்பது அவதாரங்களையும் போற்றி பாடும் பக்தி பாடல்களும் அடங்கும்.
அவ்வகையில், முன்னோர்களால் தோற்று விக்கப்பட்ட பெர்சாத்துவான் செராஸ் இந்து பரிபாலன சபை, மாணவர்களுக்குப் பக்தி பாடல்களை நேர்த்தியாகக் கற்பித்து, வீடுகளுக்குச் சென்று பஜனைகளையும் பூஜைகளையும் செய்து வருகின்றது.
இந்த நவராத்திரி விழாவையும் முன்னிட்டு, இவ்வருடம் இந்து பரிபாலன சபையின் ஏற்பாட்டில், கொலு, கிருஷ்ணவேனி என்பவரின் வீட்டில் வைத்து, பூஜைகள் செய்து அனுசரிக்கப்பட்டுள்ளது.
தனது இல்லத்தில் அம்பிகையைத் துதித்துப் போற்றி பாடல்களைப் பாடிய, இந்து பரிபாலன சபை மாணவர்கள் குறித்து இவ்வாறு கிருஷ்ணவேனி பகிர்ந்து கொண்டார்.
நேற்று தூர்க்கையின் மூன்றாம் நாளை சிறப்பிக்கும் வகையில், கிருஷ்ணவேனியின் வீட்டில் இம்மாணவர்கள், பஜனைகளைப் பாடி சிறப்பித்துள்ளனர்.
நவராத்திரி விழாவில் ஒன்பது நாளும் அம்பிகையை வழிபட்டு, சுற்று வட்டாரத்திலுள்ள வீடுகளில் அவள் அருளாசியை மாணவர்கள் வாயிலாகக் கொண்டு செல்வதாக அதன் தலைவர் முத்தையா கூறினார்.
இந்து பரிபாலன சபை பக்தி பாடல்கள் மட்டுமல்லாது சமயம் சார்ந்து கொண்டாட்டங்களையும் நெறிகளையும் கடத்தும் ஒரு மையமாகச் செயல்பட்டு வருகிறது என்றார் அதன் பயிற்றுநர் அகேலஸ்ரீ (Agelasri).
மலைமகள், அலைமகள், கலைமகளைப் போற்றி பாடி, மாணார்களுக்கும் சமய நெறியை மட்டுமல்லாது மொழி பாடங்களையும் கற்பித்து வருகிறது பெர்சாத்துவான் செராஸ் இந்து பரிபாலன சபை.