
கோலாலம்பூர், ஜூலை-1-கோலாலம்பூர், செராசில் தனது 7 மாத வளர்ப்பு பெண் குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 39 வயது இல்லத்தரசிக்கு, 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்தாண்டு ஜூலை மாதம், ஜாலான் ஸ்ரீ பெர்மாய்சூரியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
குற்றவாளியான சித்தி சுப்ரினா இம்ரான், அந்த பச்சிளம் குழந்தையைக் கிள்ளியும், அறைந்தும், கடித்தும் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
மேலும், ஐஸ் போதைப்பொருள் எனப்படும் _Methamphetamine_ புகைத்து, அதன் புகையைக் குழந்தையின் வாய்க்குள் ஊதிய அதிர்ச்சித் தகவலும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
_”அந்தக் குழந்தையை உடல் எங்கும் காயங்களுடன் பாதி உயிருடன் விட்டுச் சென்றுள்ளேன்”_ என தன் கணவருக்கு அவர் அனுப்பிய வாட்சப் குறுஞ்செய்தியும் ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
தற்காப்பு வாதத்தின் போது, தனக்கு மாற்றுத்திறனாளி குழந்தை இருப்பதாகவும், கணவர் தன்னை கைவிட்டுவிட்டதாகவும் கூறி குற்றவாளி கண்ணீர் விட்டு அழுதார்.
எனினும், பச்சிளம் குழந்தைக்கு இழைக்கப்பட்ட இந்த கொடூரத்திற்காக அவருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.



