
கோலாலம்பூர், ஜூலை-9, நாடு சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளை நெருங்கும் நிலையிலும் இந்தியச் சமூகத்தின் நிலைமை இன்னும் தேசிய முன்னுரிமையாக கருதப்படவில்லை.
கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Charles Santiago இவ்வாறு வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் குறை கூறும் சூழலில், இந்தியச் சமூகத்தின் அடிப்படை பிரச்சனைகளான – கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் – இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை;
அரசாங்கங்கள் மாறினாலும், இந்தியச் சமூகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதன் விளைவே இதுவென அவர் குறிப்பிட்டார்.
பி.கே.ஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் திரைக்குப் பின்னால் மக்கள் பணியாற்றுவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து சார்ல்ஸ் பேசியபோது, அவர் இதனை தெரிவித்தார்.
இதனிடையே நூருல் இசாவை பாராட்டிய சார்ல்ஸ்– அவர் யாயாசன் இல்திசாம் (Yayasan Iltizam), SICC மற்றும் அடிதட்டு சமூக தலைவர்களுடன் இணைந்து, 13-ஆவது மலேசியா திட்டத்திற்கு 40-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை உருவாக்கியதையும் சுட்டிக்காட்டினார்.
200-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களின் பங்களிப்புடன் உருவான இந்த பரிந்துரைகள், நீண்டகால, சமநிலை கொண்ட அமைப்பு மாற்றங்களை குறிவைத்துள்ளன.
“பெருமை பேசும் நேரமல்ல இது – மாற்றத்துக்கான உண்மையான முயற்சிக்கான நேரம்,” என கூறிய சார்ல்ஸ், எந்தச் சூழலில் சமூகத்தின் வலியை அரசியல் சாதனமாக பயன்படுத்த கூடாது; மாற்றத்திற்காக அரசியல்வாதிகள், சமுதாயத் தலைவர்கள், வணிக உலகம் எல்லோரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
இது, ஆக்கப்பூர்வமான விமர்சனத்திற்கு எதிரான அழைப்பு அல்ல, மாறாக அதை கட்டமைப்பதற்கும் முன்னேற்றத்தை நோக்கி நகர்வதற்குமான அழைப்பு என்றார் அவர்.