
பாங்கி – ஜூலை-6 – மித்ராவின் ‘அறிவியல் ஐந்திரம்’ திட்டத்தின் வாயிலாக 525 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 80,000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
மித்ரா தலைவர் பி.பிரபாகாரன் அதனைத் தெரிவித்தார்.
மித்ராவின் சுமார் 700,000 ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில், MABIC எனப்படும் மலேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையத்துடன் இணைந்து இந்த ‘அறிவியல் ஐந்திரம்’ திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் பாடங்கள் மீது தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டவும், கல்வியறிவை மேம்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.
‘அறிவியல் ஐந்திரம்’ திட்டத்தின் உச்சக்கட்டமாக பாங்கி, மலேசியத் தேசியப் பல்கலைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற “Who wants to Be a Scientist?” அறிவியல் புதிர் போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கேற்ற பிறகு, பிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
நாடு முழுவதும் பங்கேற்ற 2,000 மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிறந்த 90 மாணவர்கள் இந்த இறுதிச் சுற்றில் கலந்துகொண்டனர்.
STEM தொடர்பான பல்வேறு திட்டங்களை அமுல்படுத்த MABIC-க்கு மித்ராவின் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவியல் புதிர் போட்டி, மற்றும் 525 தமிழ்ப் பள்ளிகளுக்கு Petro Dish அறிவியல் செய்தித்தாட்களை விநியோகிப்பதும் அவற்றில் அடங்கும் என்றார் அவர்.
STEM படிப்புகள் வளர்ந்து வருவதோடு சாத்தியமான மற்றும் கவர்ச்சிகரமான தொழில் தேர்வாகவும் மாறி வருகின்றன; அதற்காக அவர்களை தயார்படுத்த விரும்புகிறோம் என, பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபாகரன் சொன்னார்.