Latestமலேசியா

9 மலை 7 நாட்கள்: எல்லைகளை எட்டிப் பார்க்கும் முயற்சியில் லோகா சந்திரன்

கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-8 – கோவிட் காலத்தில் பொழுதுபோக்காகத் தொடங்கிய ஓர் இளைஞரின் மலையேறும் நடவடிக்கை, இன்று மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியாக வளர்ந்து நிற்கிறது.

பேராக்கைச் சேர்ந்த 26 வயது லோகசந்திரன் ராமசந்திரன் என்ற தனியார் பல்கலைக்கழக மாணவரே அவராவார். கோவிட் பெருந்தொற்றின் போது சிங்கப்பூரில் ஒரு பொழுதுபோக்காக சின்ன சின்ன மலைகளில் ஏறியவர், பின்னர் இங்குத் திரும்பியதும் அதனைத் தொடர்ந்துள்ளார்.

இப்போது மலேசியாவில் யாரும் செய்யாத சாதனையாக, 7 மாநிலங்களில் 9 மலைகளை ஏழே நாட்களில் தனியாளாக ஏறுவதற்கு இவர் திட்டமிட்டுள்ளார்.

ஜோகூர், நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பஹாங், திரங்கானு, கெடா, பேராக் ஆகியவே அந்த 7 மாநிலங்களாகும். ஆகஸ்ட் 25-ஆம் தேதி 1,276 மீட்டர் உயரம் கொண்ட ஜோகூர், கூனோங் லேடாங் மலையில் (Gunung Ledang) இவரின் இந்த துணிகர பயணம் தொடங்குகிறது.

தேசிய தினமான ஆகஸ்ட் 31-ஆம் தேதி பேராக் கூனோங் கெருனாய் (Gunung Kerunai) மலையில் இந்தச் சாதனைப் பயணம் நிறைவடையும். இதில் திரங்கானுவில் மலையேறி இறங்குவதற்கு 10 மணி நேரங்கள் வரை பிடிக்குமென வணக்கம் மலேசியாவிடம் அவர் கூறினார்.

ஆர்வம் ஒருபக்கம் இருக்க, இம்முயற்சியில் இறங்குவதற்கு நாட்டின் மீதான பற்றும் ஒரு காரணமெனக் கூறும் லோக சந்திரன், இது மற்ற இளைஞர்களுக்கும் ஊக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

இந்த அசாதாரண முயற்சிக்கு ஆகும் மொத்த செலவு 15,000 ரிங்கிட்டாகும்; அதில் எப்படியோ 7,000 ரிங்கிட்டை லோக சந்திரன் புரட்டி விட்டார்.

இது பெட்ரோல், டோல், மலை நுழைவுக் கட்டணம், பெட்மிட், உணவு உள்ளிட்ட செலவுகளாகும்.

இதுவரை தனிப்பட்ட முயற்சியிலும் குடும்பத்தாரின் ஆதரவிலும் செயல்பட்டு வரும் லோக சந்திரன், இந்த மலேசிய சாதனை முயற்சிக்கு ரொக்கம், போக்குவரத்து, மலையேறுவதற்கான உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகளை பொது மக்களிடம் எதிர்பார்க்கிறார்.

ஒருவேளை ரொக்கமாகவோ பொருளாகவோ கொடுக்க முடியாதவர்கள், இப்பயணத்தின் போது உடன் வருவது, பொருட்களைத் தூக்கிச் செல்வது போன்ற உதவிகளை செய்யவும் வரவேற்கப்படுகின்றனர்.

உதவ விரும்புவோர் 012-694 1050 என்ற எண்களில் லோக சந்திரனைத் தொடர்புகொள்ளலாம். இந்தக் ‘கைப்பேசி’ உலகத்தில் பிள்ளைகளுக்குப் பெற்றோர்களே கைப்பேசியைக் கொடுத்து விடுகின்றனர்.

உண்மையில், கைப்பேசி மற்றும் சமூக ஊடகங்களைத் தவிர்த்து, சாதிக்க குறிப்பாக விளையாட்டில் எவ்வளவோ இருக்கிறது என இவர் ஆலோசனைக் கூறுகிறார்.

காரணம் கூறுபவர்கள் சாதிப்பதில்லை எனக் கேட்டிருப்போம்; இந்த இளைஞரோ சிங்கப்பூரில் 12 மணி நேரம் வேலை, ஷா ஆலாம் MSU பல்கலைக் கழகத்தில் பகுதி நேர படிப்பு, என இயந்தியரம் போல் சுற்றுக் கொண்டே, இந்த மலையேறும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

மற்ற இளைஞர்களுக்கும் முன்னோடியாகத் திகழும் லோக சந்திரனனின் முயற்சியைப் பாராட்டுவதோடு, அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் வகையில் நாமும் நம்மால் முடிந்ததை செய்யலாமே…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!