கெந்திங் ஹைலேண்ட்ஸ், ஏப்ரல் 15 – கெந்திங் மலை, ஜாலான் தூருன் கெந்திங் ஹைலேண்ட்ஸிலுள்ள, மலைப்பகுதியிலிருந்து, கிட்டத்தட்ட சிதைந்த நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அச்சம்பவம் தொடர்பில், நேற்று மாலை மணி 3.40 வாக்கில், பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததை, பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சைஹாம் முஹமட் கஹர் உறுதிப்படுத்தினார்.
சம்பவம் நடந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கிட்டத்தட்ட அழுகிய நிலையில் உடல் ஒன்று கிடப்பது கண்டறியப்பட்டது. எனினும் முற்றாக சிதைந்து போயிருப்பதால் பாலினம் உட்பட இதர விவரங்கள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை.
தீயணைப்பு வீரர்களின் உதவியோடு சடலம், குவாந்தான் துவாங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை ; அதனை ஒரு திடீர் மரணமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளது.
அச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.