கோலாலம்பூர், ஏப்ரல் 15 – கோவிட்-19 தடுப்பூசி தொடர்பில், அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ லோக்மான் நூர் ஆடமிற்கும், முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடினுக்கும் இடையிலான, அவதூறு வழக்கிற்கு, இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சுமூகமான முறையில் தீர்வுக் காணப்பட்டது.
30 நாட்களில், கைரியிடம் மன்னிப்புக் கேட்கவும், இழப்பீடு வழங்கவும் லோக்மான் ஒப்புக் கொண்டதை அடுத்து அந்த வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இன்று அந்த வழக்கு விசாரணை தொடங்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், இரு தரப்பினருக்கும், வழக்கை சுமூகமாக தீர்ப்பதற்கு ஒப்புக் கொண்டதால், செலவுப்படி தொகை எதுவும் இல்லாமல் விசாரணை நிறுத்தப்படுவதாக, நீதிபதி தெரிவித்தார்.
லோக்மான் இன்று நீதிமன்றத்திற்கு வரவில்லை.
எனினும், அவ்விவகாரம் தொடர்பில், தமது முகநூல் மற்றும் யூடிப்யூப் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ள, புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்ட ஏழு உள்ளடக்கங்களை அகற்றவும் லோக்மான் இணக்கம் தெரிவித்துள்ளதாக, அவரது வழக்கறிஞர் கூறினார்.
இவ்வேளையில், அந்த தீர்ப்பை வரவேற்பதாகவும், மனநிறைவு அளிப்பதாகவும் கைரி கூறியுள்ளார்.
முன்னதாக, 2022-ஆம் ஆண்டு, ஜனவரி 25-ஆம் தேதி, கோவிட்-19 தடுப்பூசி தொடர்பில், 51 வயது லோக்மான் மற்றும் 43 வயது முஹமட் ரசிட் முஹமட் அல்வி ஆகிய இருவருக்கும் எதிராக, இரு அவதூறு வழக்குகளை கைரி தனித்தனியே தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.