கோலாலம்பூர், ஏப்ரல் 18 – இம்மாதம் 14-ஆம் தேதி, KLIA – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும், நபருக்கு எதிராக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவ்வாடவன், எங்கிருந்து அல்லது எவ்வாறு துப்பாக்கியை வாங்கினான் என்பது குறித்தும் ஆராயப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பில், இதுவரை 15 பேரின் வாக்குமூலங்களை போலீஸ் பதிவுச் செய்துள்ளது. அதில், சம்பந்தப்பட்ட ஆடவனின் மனைவி, காயம் அடையாத மெய்காவலர் ஆகியோரும் அடங்குவார்கள் என, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் தெரிவித்தார்.
அதே சமயம், 32 தோட்டாக்களும், ஆஸ்திரிய க்ளோக் 19 ரக துப்பாக்கியும் எப்படி கிடைத்தது என்பது தொடர்பான தகவல்களை, சந்தேக நபரிடமிருந்து, தமது தரப்பு சேகரித்து வருவதாக ஓமார் கான் சொன்னார்.
அவ்வாடவனுக்கு எதிராக, கொலை முயற்சி மற்றும் சுடும் ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்ட ஏதுவாக அந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முன்னதாக, KLIA விமான நிலையத்தில், துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்திய பின்னர் தலைமறைவான, 38 வயது ஹபிசுல் ஹராவி, 36 மணி நேரத்திற்கு பின்னர், கோத்தா பாரு, ஜாலான் பந்தையில் கைது செய்யப்பட்டதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அங்கிருந்து அவன் மெக்காவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அவனிடமிருத்து, ஆஸ்திரிய க்ளோக் 19 ரக துப்பாக்கியும், 32 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்ட வேளை ; விசாரணைக்கு உதவும் பொருட்டு வரும் திங்கட்கிழமை வரை அவன் ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.