கோலாலம்பூர், ஏப்ரல் 29 – ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் மீண்டும் இவ்வாண்டு ஏற்பாடுச் செய்யப்பட்ட திருவிளங்கு சைவ திருமுறை மாநாடு நேற்று நிறைவை எட்டியது.
எழில் கமழும் திருநாளாக ஏப்ரல் 26,27 மற்றும் 28-ஆம் தேதிகளில் நடைபெற்ற இம்மாநாட்டில் தேவாரப் போட்டி, சைவ சித்தாந்த சொற்பொழிவுகள், ஆன்மீக பேருரைகள், தேவாரப் பண்ணிசைகள் என பல அங்கங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்திய சமூகத்தினர் மத்தியில் தேவாரம் மேல் கொண்ட ஈடுபாடு நளிந்து வந்து கொண்டிருக்கும் இக்காலத்தில், சுமார் 250 வளரும் தலைமுறையினர் மிகுந்த ஆர்வத்துடன் தேவாரப் போட்டியில் கலந்து கொண்டது தமக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது என தெரிவித்தார் தேவஸ்தானத் தலைவரும் அரங்காவருமான டான் ஸ்ரீ டத்தோ ஆர். நடராஜா.
இவ்விழாவில் ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கலந்து சிறப்பித்ததோடு சமய சொற்பொழிவும் ஆற்றினார்.
தேவாரத்தின் புகழ்மணக்குச் செய்த அம்மாநாட்டில் DSK குழுமத்தின் தலைமையில் 63 நாயன்மார்களின் சிறப்புகளையும் அவர்களின் தவ வாழ்க்கையில் ஈசனுக்கு தொண்டாற்றிய வரலாற்றையும் ஒலி ஓளி வடிவத்திலான வலைப்பக்கமும் இந்த நன்னாளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனிடையே, அந்த வலைப்பக்கம் விரைவில் செயலியாகவும் வெளியீடு காணவுள்ளதை அதன் தலைவர் டத்தோ சிவக்குமார் அறிவித்தார்.
மலேசியாவில் சமய வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் இந்த மாநாடு பெரும் பங்களித்திருப்பதாக வந்திருந்த பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.
மிகவும் சிரத்தை எடுத்து டான் ஶ்ரீ நடராஜா தலைமையில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ள மிகவும் பயனுள்ள இந்த நிகழ்ச்சி வருங்காலங்களிலும் நடத்தப்படும் என வந்திருந்தவர்கள் தங்களின் எதிர்பார்ப்பையும் தெர்வித்தனர்.