ஜொகூர் பாரு, மே-12 – நாய் கடித்த ஆடவருக்கு தாமதமாக சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நபருக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்காக
ஜொகூர் பாரு சுல்தானா அமீனா மருத்துவமனை HSA நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.
வலது தொடையில் நாய் கடிக்கு ஆளான தம்மை,
HSA மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு நடத்திய விதம் குறித்து ஏமாற்றம் தெரிவித்து அவ்வாடவர் முன்னதாக Tik Tok-கிலும் Facebook-கிலும் வீடியோவைப் பதிவேற்றியிருந்தார்.
அது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக HSA மருத்துவமனையின் இயக்குனர் Dr Sal Atan கூறினார்.
கிளினிக்கில் பெறப்பட்ட பரிந்துரை கடிதத்தோடு (Referral letter) புதன்கிழமை மாலை 5.45 மணியளவில் நாய் கடிக்குச் சிகிச்சைப் பெறுவதற்காக அந்நபர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்திருந்தார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவப் பணியாளர்கள், அபாயக் கட்டத்தில் இல்லாத அவசர சிகிச்சை என வகைப்படுத்தி அவரை பச்சை நிற பகுதியில் அமர வைத்தனர்.
எனினும் அப்போது அந்த Green Zone பகுதியில் ஏற்கனவே 78 நோயாளிகள் இருந்ததால், நாய் கடிக்கு சிகிச்சைப் பெற வந்தவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாமல் போனது உட்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
எனவே அவருக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மருத்துவமனை வருந்துகிறது.
“எங்களை நாடி வரும் ஒவ்வொரு நோயாளிக்கும் உரிய சிகிச்சை அளிக்கும் கடப்பாட்டிலும், பாகுபாடு பார்க்காமல் அவர்களை நடத்துவதிலும் நாங்கள் கடமைத் தவறியதில்லை” என Dr Sal Atan தெளிவுப்படுத்தினார்.