ஹனோய், மே-27, வியட்நாமில் 200 கிலோ கிராம் எடையுடன் மிகவும் குண்டாக இருக்கும் புலி, கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
அந்த ‘குண்டு’ புலி, வன விலங்குகளைக் கடத்தும் கும்பலிடம் இருந்து அண்மையில் தான் போலீசாரால் மீட்கப்பட்டது.
சிறிய கூண்டினுள் அடைக்கப்பட்ட நிலையில் காப்பாற்றப்பட்ட அப்புலி நடப்பதற்கே சிரமப்பட்டதால், விலங்குகள் சரணாலய நிபுணர்களின் உதவியை போலீஸ் நாடியது.
வந்துப் பார்த்த நிபுணர்கள் புலியின் எடையைக் கண்டு வாயடைத்துப் போயினர்.
காரணம், வழக்கமாக பெரிய புலிகளின் சராசரி எடை 63.5 கிலோ கிராமில் இருந்து 165.1. கிலோ கிராம் வரையில் மட்டுமே இருக்கும்.
ஆனால் 200 கிலோ கிராம் எடையில் அப்புலி நகருவதற்கே சிரமப்படுவதால், வேறு வழியின்றி அதற்கு கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை அவர்கள் கொண்டு வந்துள்ளனர்.
இல்லையென்றால் புலியின் உயிருக்கே ஆபத்து என அவர்கள் எச்சரித்தனர்.
உணவுக் கட்டுப்பாட்டுக்கு புலி ஒத்துழைத்து சீக்கிரமே உடல் எடை குறைந்து வழக்கம் போல் நடமாடும் என சரணாலய பணியாளர்கள் நம்புகின்றனர்.