செம்போர்னா, ஜூன்-7 – சபா, செம்போர்னாவில் ஈட்டி துப்பாக்கி என சொல்லப்படும் Speargun பயன்படுத்தி மீன் பிடித்த வெளிநாட்டு சுற்றுப்பயணியின் செயல், இந்நாட்டுச் சட்டத் திட்டங்களை மீறியதாகும்.
எனவே, அங்குள்ள முக்குளிப்பு மையமொன்றில் அண்மையில் நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில மீன்வளத் துறை கூறியிருக்கிறது.
ஆழ்கடல் அல்லது ஆறுகளில் speargun மூலம் மீன்களை வேட்டையாட அரசாங்கம் ஒருபோதும் உரிமம் வழங்கியதில்லை.
ஆக, திருட்டுத்தனமான மற்றும் கட்டுப்படுத்தப்படாத மீன்பிடி நடவடிக்கைக எனக் கருதப்பட்டு அச்சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அத்துறை விளக்கியது.
செம்போர்னாவில் சுற்றுப்பயணி ஒருவர் ஈட்டி துப்பாக்கியைக் கொண்டு மீன் வேட்டையாடுவதைக் காட்டும் காணொலி முன்னதாக வைரலானது.
வேகமாக அழிந்து வருவதால், முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள பச்சை நிற கடலாமையைப் அந்நபர் தொடுவதும் அதில் தெரிகிறது.
மற்றவர்களுக்கு ஒரு பாடமாகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்த செம்போர்னா சம்பவத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத் துறை திட்டவட்டமாகக் கூறியது.