பெட்டாலிங் ஜெயா, ஜூன் 17 – KLIA தானியங்கி ‘கேட்களை’ வெளிநாட்டாவர்கள் பயன்படுத்த அனுமதி ; தற்காத்து பேசுகிறது குடிநுழைவுத் துறை
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 17 – KLIA கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலுள்ள, “ஆட்டோகேட்கள்” எனப்படும் தானியங்கி நுழைவாயில்களை பயன்படுத்த 63 நாடுகளை சேர்ந்த வருகையாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ள நடவடிக்கையை, தேசிய குடிநுழைவுத் துறை தற்காத்து பேசியுள்ளது.
நாட்டிற்கு வருகை புரியும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளதால், விமான நிலையத்தில் நெரிசலை குறைக்க அந்நடவடிக்கை அவசியம் என, குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குனர் ருஸ்லின் ஜூசோ (Ruslin Jusoh) தெரிவித்தார்.
கடந்தாண்டு 30 மில்லியன் சுற்றுப் பயணிகள் நாட்டிற்கு வருகை புரிந்தனர். இவ்வாண்டு இதுவரை மட்டும், நாட்டிற்கு வருகை புரிந்த சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 13 மில்லியன் ஆக பதிவாகியுள்ளது.
அந்த அதிகரிப்பு, தேசிய பாதுகாப்பில் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்காமல், வருகையாளர்களுக்கு எளிமையான சேவையை வழங்க வேண்டியதன் அவசியத்தை காட்டுவதாக ருஸ்லின் சொன்னார்.
குறிப்பாக, தானியங்கி நுழைவாயில்களை வெளிநாட்டவர்களின் பயன்பாட்டுக்கு திறப்பதன் வாயிலாக, 30 நிமிட காத்திருப்பு நேரத்தை பத்து முதல் 15 வினாடிகளாக குறைக்க குடியும்.
அதனால், கோலாலம்பூர் விமான நிலையம் வந்தடையும் 85 விழுக்காட்டு வெளிநாட்டவர்கள், 25 நிமிடங்களில் தங்கள் குடிநுழைவு நடைமுறைகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறலாம் என ருஸ்லின் விளக்கினார்.
முன்னதாக, “ஆட்டோகேட்களை” வெளிநாட்டவர்களுக்கு திறந்த குடிநுழைவுத் துறையின் செயல் குறித்து, X சமூக ஊடக பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள கண்டனம் தெடர்பில் ருஸ்லின் இவ்வாறு கருத்துரைத்தார்.
ஆட்டோகேட்கள் வெளிநாட்டவர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது, மலேசியர்களின் சிறப்பு சலுகையை நிராகரிக்கும் செயல் எனவும், அந்த ஆட்டோகேட்களை பயன்படுத்த தெரியாமல் தவித்த அந்நிய சுற்றுப் பயணிகளுக்கு, அங்கு பணியில் இருந்த குடிநுழைவுத் துறை அதிகாரிகள் உதவவில்லை எனவும் அந்த பதிவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.