கோலாலம்பூர், ஜூன்-20 – 2 மாதங்களுக்கு முன்னர் பெண்ணொருவரின் காருக்கு வேண்டுமென்றே தீ வைத்தக் குற்றத்தைப் ஒப்புக் கொண்ட ஆடவருக்கு, கோலாலம்பூர் செஷன்ஸ் நிதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
39 வயது டி.குணசேகரன் நேற்று தொடங்கி சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி அறிவித்தார்.
ஏப்ரல் 11-ஆம் தேதி செராசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் முன்புறம் நிகழ்ந்த சம்பவத்தில், 37 வயது மஞ்சீட்பால் கவுருக்குச் (Manjeetpal Kaur) சொந்தமான 43,000 ரிங்கிட் மதிப்புள்ள Toyota Vios காருக்குத் அவர் தீ வைத்தார்.
தீயை அணைத்த அங்கிருந்த பொது மக்கள், அந்நபரைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் இருந்து அப்போது கத்தியொன்றும், சிகரெட் லைட்டரும் பறிமுதல் செய்யப்பட்டன.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நட்டம் ஏற்படும் அளவுக்கு அதுவொரு கடுமையானக் குற்றம் என்பதால், குற்றவாளிக்கு ஒரு பாடமாக இருக்கும் வகையிலான தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரசு தரப்பு நீதிபதியிடம் கோரியது.
வழக்கறிஞரை வைக்காத குணசேகரன், தனக்கு வேலை இல்லையென்றும், நோய்வாய்ப்பட்ட தாயைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதாலும் குறைந்தபட்ச தண்டனையைக் கேட்டது குறிப்பிடத்தக்கது.