கோலாலம்பூர், ஜூன்-25 – மனநல ஆரோக்கியப் பிரச்னைக்கு ஆலோசனை உதவி வழங்கும் Talian HEAL 15555 சிறப்புத் தொலைபேசி அழைப்புச் சேவையை இலவசமாக வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கைப்பேசி நிறுவனங்களுடன் அது குறித்து பேசப்பட்டு வருவதாக சுகாதார துணையமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி ( Datuk Lukanisman Awang Sauni ) மக்களவையில் தெரிவித்தார்.
பொது மக்கள் குறிப்பாக பதின்ம வயதினர், தாங்கள் எதிர்நோக்கும் மனநலப் பிரச்னைகளுக்கு உரிய ஆலோசனைகளைப் பெற எதுவாக அச்சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது அச்சேவைக்கு, நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் கட்டணம் விதிக்கப்படுகிறது.
Celcom, Digi, Maxis போன்ற பெரிய நிறுவனங்கள் மனது வைத்தால் அச்சேவையை இலவசமாக வழங்க முடியும்.
அதன் மூலம் மேலும் ஏராளமான பதின்ம வயதினர் தைரியமாக முன் வந்து, மனநல ஆலோசகர்களிடம் உதவியை நாட வாய்ப்பு ஏற்படும் என துணை அமைச்சர் சொன்னார்.
2022-ஆம் ஆண்டு அக்டோபரில் Talian HEAL சேவை தொடங்கப்பட்டதில் இருந்து, இதுவரை 46,324 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன.
அவற்றில் 59 விழுக்காட்டினருக்கு மனோவியல் ரீதியிலான உதவிகளும், எஞ்சிய 41 விழுக்காட்டினருக்கு சிறப்பு தலையீடு வகையிலும் உதவிகள் வழங்கப்பட்டது என்றார் அவர்.