கோலாலம்பூர், ஜூலை 3 – தங்களது தொகுதிகள் காலியானதாக நாடாளுமன்ற சபாநாயகர் Johari Abdul பிரகடனப்படுத்தமாட்டார் என பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பெர்சத்து கட்சியிலிருந்து தாங்கள் விலகவில்லை என்றும் கட்சிதான் தங்களை நீக்கியது என்பதால் கட்சி தாவலுக்கு எதிரான சட்டத்தை மீறவில்லை என லபுவான் எம்.பி சுஹாய்லி அப்துல் ரஹ்மான் ( Suhaili Abdul Rahman ) வலியுறுத்தினார். நாங்கள் இன்னமும் சட்டப்பூர்வமான நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் என நம்புகிறோம் என அவர் கூறினார்.
பெர்சத்துவில் உறுப்பினர் நிலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டதால் அரசாங்கத்தை ஆதரிக்கும் சுயேச்சை எம்.பிக்களாக நாங்கள் இருக்கிறோம். எனவே இது குறித்து இனியும் ஆருடங்கள் கூறப்படாது என்று நான் நம்புகிறேன். நாடாளுமன்ற சபாநாயகர் அவரது முடிவை அறிவிக்கட்டும் என்று, இன்று நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சுஹாய்லி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் ஜெலி, குவா மூசாங், புக்கிட் கந்தாங், தஞ்சோங் காராங் மற்றும் கோலா கங்சார் ஆகிய இதர 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.