பெட்டாலிங் ஜெயா, ஜூலை 5 – தேசிய கணக்காய்வு அறிக்கையில், “நடைமுறைகளை பின்பற்றவில்லை” என HRD Corp நிறுவனத்திற்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், கெசுமா – மனிதவள அமைச்சு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்யும்.
மனிதவள அமைச்சின் தலைமைச் செயலாளரை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்யுமாறு தாம் பணித்துள்ளதாக, அமைச்சர் ஸ்டீவன் சிம் (Steven Sim) தெரிவித்தார்.
அதே சமயம், சட்டத்திற்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையிலும், விட்டுக் கொடுக்கும் போக்கு கடைப்பிடிக்கப்படாது எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, நேற்று வெளியிடப்பட்ட தேசிய கணக்காய்வு அறிக்கை வாயிலாக, HRD Corp நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள், நடைமுறைகளை பின்பற்றவில்லை என்பதோடு, அந்நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட நோக்கத்தை அடைவதில் அக்கறை காட்டவில்லை என தேசிய கணக்காய்வாளர் வான் சுரயா வான் முஹமட் ராட்ஸி கூறியிருந்தார்.
அதனால், அந்நிறுவனத்தை சம்பந்தப்பட்ட அமலாக்க நிறுவனத்தின் நடவடிக்கைக்கு, கெசுமா பரிந்துரைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.