ஜோகூர் பாரு, ஜூலை 8 – இணைய வர்த்தக முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்தால் 20 விழுக்காடு இலாபம் கிடைக்கும் என்ற வாக்குறுதியை நம்பி முதலீடு செய்த தொழிற்நுட்பாளர் ஒருவர் 160,000 ரிங்கிட்டிற்கும் மேல் ஏமாந்தார்.
20 விழுக்காடு லாபம் கிடைக்கும் என முகநூலில் அறிமுகமான ஒருவரின் பேச்சை நம்பி அந்த தொழிற்நுட்பாளர் முதலீடு செய்த அனைத்து பணத்தையும் பறிகொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட 36 வயது ஆடவர் இது குறித்து புகார் செய்திருப்பதாக ஸ்ரீ அலாம் (Seri Alam) மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் சொஹாய்மி இஷாக் ( Mohd Sohaimi Ishak ) தெரிவித்தார்.
கூடுதல் வருமானம் கிடைக்கும் என நம்பிய அந்த தொழிற்நுட்பாளர் வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 21 முறை 167, 147.55 ரிங்கிட்டை பட்டுவாடா செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி முதல் ஜூன் 23 ஆம்தேதிவரை இந்த தொகையை அவர் பட்டுவாடா செய்துள்ளார். எனினும் வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு ஏற்ப லாபா தொகையை மீட்க முடியாததைத் தொடர்ந்து தாம் ஏமாந்துவிட்டதை உணர்ந்து அவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
ஏமாற்றியது தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 420 ஆவது விதியின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக முகமட் சொஹாய்மி கூறினார்.