மும்பை, ஜூலை-9 – மனிதர்களுக்கும் நாய்களுக்குமான உறவை வார்த்தைகளால் விவரிக்க முடியாது; அந்தளவுக்கு பாசப்பிணைப்பைக் கொண்ட உறவு அது.
வீட்டில் நாய்களை வளர்ப்புப் பிராணிகளாக வைத்திருப்போரை சொல்லவே வேண்டாம்.
பிள்ளைகளுக்கு ஈடாக நாய்களிடம் பாசத்தைப் பொழிவார்கள்; அவற்றுக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள்.
இது எல்லா நாடுகளிலும் சகஜமான ஒன்று.
அவ்வகையில் இந்தியா மும்பையில் தனது வளர்ப்பு நாயான டைகர் மீது உயிரையே வைத்துள்ள சரிதா எனும் பெண், அதன் பிறந்தநாளுக்குச் செய்துள்ள காரியம் தான் தற்போது வைரலாகியுள்ளது.
‘டைகரை’ நகைக்கடைக்குக் கூட்டிச் சென்ற சரிதா, பிறந்த நாள் பரிசாக அதற்கு 2.5 லட்சம் ரூபாய் அல்லது 3,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை வாங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
நாயைத் துணைக்குத் தான் கூட்டி வந்திருப்பதாக எண்ணிய நகைக் கடை ஊழியர்கள், இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கச் சங்கிலியே அதற்காகத் தான் வாங்கப்பட்டது என்பதை எதிர்பார்க்கவில்லை.
வாங்கியச் சங்கிலியை அங்கேயே நாயின் கழுத்தில் போட்டு சரிதா அழகுப் பார்க்க, நகைக்கடை ஊழியர்கள் அதனை வீடியோவில் பதிவுச் செய்து வைரலாக்கியுள்ளனர்.
நன்றியுள்ள ஜீவன் மட்டுமல்ல, ‘பாசக்காரப் பையனான’ டைகரை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் ஆலோசனை வழங்கினர்.