கோலாலம்பூர், ஆக 1 -மோசடி முதலீட்டு நிறுவனத்துடன் தொடர்புடைய
30 மில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலான சொத்துக்கள் மற்றும் கணக்குகளை பேங்க் நெகாரா மலேசியா பறிமுதல் செய்தது. அந்த முதலீட்டு நிறுவனம் மேற்கொண்ட சந்தேகத்திற்குரிய மோசடி நடவடிக்கைகள் மூலம் தொடர்புடைய 30 மில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலான பல்வேறு ஆடம்பரமான பொருட்கள் மற்றும் 92 வங்கிக் கணக்குகளும் பேங்க் நெகாரா மலேசியா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்று முதல் கிள்ளான் பள்ளத்தாக்கில் 12 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின்போது அந்த பொருட்களும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பேங்க் நெகாரா மலேசியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சு, உள்நாட்டு வருமான வாரியம், மலேசிய இணைய பாதுகாப்பு மற்றும் போலீஸ் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு தேசிய நிதி குற்றச்செயல் மையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
XFOX Market Sdn Bhd மற்றும் பல்வேறு நிதிக் குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் பல நிறுவனங்களை குறிவைத்து இந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு பல்வேறு ஆவணங்கள் மற்றும் விசாரணைக்கு தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பேங்க் நெகாரா மலேசியா தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் விளைவாக தங்கம், 4.85 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான பணம், வெளிநாட்டு நாணயம் உட்பட, கிரிப்டோகரன்சிகள், வாகனங்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களுடன் ஏராளமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கூடுதலாக RM25.4 மில்லியன் மதிப்புள்ள 92 வங்கிக் கணக்குகள் மற்றும் பாதுகாப்பான வைப்புப் பெட்டிகளும் முடக்கப்பட்டுள்ளன. மோசடி தொடர்பான பல்வேறு சட்டங்களின் கீழ் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பேங்க் நெகாரா தெரிவித்துள்ளது.