மஞ்சோங், ஆகஸ்ட்-4, பேராக், ஆயர் தாவாரில் வீட்டொன்றில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸ் 2 ஆடவர்களைத் தேடி வருகிறது.
அவ்விருவரும், ஆலோங் (Ah Long) எனப்படும் வட்டி முதலைகள் கூலிக்கு வைத்த ஆட்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
முகமூடி அணிந்த இரு ஆடவர்கள் பாதிக்கப்பட்டட வீட்டை நோக்கி நடந்துச் செல்வதும், அவர்களில் ஒருவன் மிரட்டல் கடிதம் மற்றும் எரிபொருள் திரவம் அடங்கிய பிளாஸ்டிக்கை வீசுவதும் CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
உடனிருந்தவன் பெட்ரோல் குண்டை வீசியெறிய, அது அங்கிருந்த Toyota Hilux வாகனத்தில் விழுந்து தீப்பற்றிக் கொண்டது.
இருவரும் மின்னல் வேகத்தில் தப்பியோட, வீட்டிலிருந்தவர்கள் தீயை அணைத்தனர்.
விசாரித்ததில், குடும்ப உறுப்பினர் ஒருவர் வட்டி முதலையிடம் கடன் வாங்கியிருப்பது தெரிய வந்தது.
குற்றவியல் சட்டத்தின் 435-வது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டு 2 சந்தேக நபர்களும் தேடப்படுகின்றனர்.
மஞ்சோங் வட்டாரத்தில் இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் வீடுகளில் சிவப்புச் சாயம் தெளிக்கப்பட்டது, பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தொடர்பில் 16 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டு அறுவர் கைதாகியிருப்பதாக போலீஸ் தெரிவித்தது.