கோலாலம்பூர், ஆகஸ்ட்-14, வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து மக்களும் பாதுகாக்கப்படுவர் என அந்நாட்டு இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனூஸ் உத்தரவாதமளித்துள்ளார்.
நேற்றிரவு அவருடன் கைப்பேசியில் உரையாடிய போது யூனூஸ் அவ்வாறு உறுதியளித்ததாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பெரும்பான்மை முஸ்லீம்கள் போல இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரும் சமமாக நடத்தப்படுவர் என உறுதியளிக்கப்பட்டதாக அன்வார் சொன்னார்.
இவ்வேளையில் கலவரத்திற்குப் பிறகு வங்காளதேசத்தில் மீண்டும் அமைதியைத் திரும்பச் செய்யும் முயற்சிகளுக்கு உதவ மலேசியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
வங்காளதேசத்தில் நிகழும் மத அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக அந்நாட்டு இடைக்கால அரசிடம் நேரடியாகவோ அல்லது மலேசியாவில் உள்ள அந்நாட்டு தூதரகம் வழியாகவோ பிரதமர் அன்வார் மலேசியாவின் கண்டனத்தை உறுதியோடு முன் வைக்க வேண்டுமென, ம.இ.கா தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் முன்னதாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அங்கு நிலவும் கலவரச் சூழலை விரைவில் முடிவுக்கு வந்து சிறும்பான்மையினர் உட்பட அந்நாட்டு மக்கள் அனைவரும் அமைதியான இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவார்கள் என, மேலவை முன்னாள் தலைவருமான விக்னேஸ்வரன் தனது எதிர்பார்ப்பை வெளியிட்டார்.
சிறுபான்மையினர் குறிப்பாக இந்துக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தும் முயற்சியில், இந்து மாணவர் அமைப்பினருடன் யூனூஸ் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.