கெமாமான், அக்டோபர்-24 – திரங்கானுவில் கெமாமான் மற்றும் ச்சுக்காய் (Chukai) உள்ளிட்ட இடங்களில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்ததால், இதுவரை அதனைப் பார்த்திராத அப்பகுதி வாழ் மக்கள் ஆச்சரியமடைந்தனர்.
மாலை 4 மணிக்குத் தொடங்கிய ஆலங்கட்டி மழை சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்கு நீடித்ததாக, கெமாமான் போலீஸ் கூறியது.
ஆலங்கட்டி மழையுடன் இடிமின்னலும் சேர்ந்துகொண்டதால் வியாபாரக் கூடாரங்கள் சேதமடைந்தன.
ஆங்காங்ஙே வீடுகள் மற்றும் பள்ளிகளின் கூரைகளும் பறந்துபோனதாக போலீசுக்குத் தகவல் கிடைத்தது.
பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து வாகனங்கள் மீதும் விழுந்தன.
ஆனால் இதுவரை உயிர் சேதம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இடிமின்னல் மற்றும் ஆலங்கட்டி மழையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக சிறிய குடிலொன்றில் ஒளிந்துகொண்ட 15 வயது பையனின் வலது கால், இடிபாடுகளில் நசுங்கி எலும்பு முறிந்தது.
ஆலங்கட்டி மழை அவ்வப்போது நிகழ்வது தான் என்றாலும் திரங்கானுவில் அது அரிதாக நடப்பதாகும்.