விழுப்புரம், அக்டோபர்-27, தீவிர அரசியலில் குதித்துள்ள தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர் விஜய், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்துகிறார்.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தின் விக்ரவாண்டியில் அவரின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பிரமாண்டமாக நடைபெறுகிறது.
சுமார் 85 ஏக்கர் பரப்பளவில் 50,000 தொண்டர்கள் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
இன்று காலை முதலே தமிழகம் முழுவதிலுமிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான தொண்டர்கள் மாநாட்டுக்குப் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்திய நேரப்படி இன்று மாலை மாநாட்டு திடலுக்கு வரவுள்ள விஜய், சிறப்பம்சமாக 100 அடி உயர்த்தில் தனது த.வெ.க கட்சிக் கொடியை ஏற்றி வைக்கவுள்ளார்.
பின்னர் சுமார் 2 மணி நேரங்களுக்கு அவர் மாநாட்டில் உரையாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் போது தனது கட்சியின் கொள்கை, இலக்கு உள்ளிட்ட விவரங்கள் குறித்து தொண்டர்களுக்கு அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை குறிக்கோளாக வைத்து, தமிழக அரசியலில் மாற்று சக்தியாக உருவெடுக்கும் நோக்கில் இந்த தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடக்கியுள்ளார்.
அதனால் தான், இந்த முதல் கட்சி மாநாட்டை எல்லாரும் பார்த்து ஆச்சரியப்படும் வகையில் மிகவும் பிரமாண்டமாக அவர் நடத்துகிறார்.