கோலாலம்பூர், நவம்பர்-28, கோலாலம்பூர்-காராக் (KL-Karak) நெடுஞ்சாலை மற்றும் LPT1 எனப்படும் முதலாவது கிழக்குக் கரை நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு நிறுவனமான
AFA Prime Bhd, டோல் கட்டணம் சிறிது உயர்த்தப்பட வேண்டுமென எதிர்பார்க்கிறது.
குறிப்பாக, 2.3 பில்லியன் ரிங்கிட் செலவை உட்படுத்திய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் வெள்ளத் தடுப்புத் திட்டம் முழுமைப் பெற்றதும், அந்த உயர்வு அங்கீகரிக்கடும் என்பதே அதன் எதிர்பார்ப்பு.
ஆனால், மற்ற நெடுஞ்சாலைகள் போலவே KL-Karak மற்றும் LPT1 நெடுஞ்சாலைகளுக்கான டோல் கட்டண உயர்வும் அரசாங்கத்தைப் பொருத்ததாகும் என, AFA குழுமத்தின் தலைவர் தான் ஸ்ரீ அஸ்மில் காலிலி காலீட் (Tan Sri Azmil Khalili Khalid) கூறினார்.
எனினும் தங்களின் கவனம் முழுவதும் தற்போதைக்கு நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் வெள்ளத் தடுப்புத் திட்டத்தை நிறைவுச் செய்வதில் தான் உள்ளது என்றார் அவர்.
தற்போது அவ்விரு நெடுஞ்சாலைகளுக்கான டோல் கட்டண விகிதம், கோம்பாக் மற்றும் பெந்தோங் டோல் சாவடிகளில் முதல் வகுப்பு வாகனங்களுக்கு 9 ரிங்கிட் 50 சென்னாக உள்ளது.
அதே காராக் முதல் குவாந்தான் டோல் சாவடி வரை 19 ரிங்கிட் 60 சென் விதிக்கப்படுகிறது.
KL-Karak விரிவாக்கப் பணிகளுக்கு 2.1 பில்லியன் ரிங்கிட்டையும், LPT1 வெள்ளத் தடுப்புத் திட்டத்திற்கு 200 மில்லியன் ரிங்கிட்டையும் AFA Prime செலவிட்டுள்ளது.