கோலாலம்பூர், நவம்பர்-29 – அதிகார முறைகேடு மற்றும் நம்பிக்கை மோசடி வழக்கில், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மானுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நியாயமானதே என, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தற்காத்து பேசியுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் சைட் சாடிக் ஒரு முன்மாதிரியாகப் பார்க்கப்படுகிறார்.
அப்படிப்பட்டவர் கண்டிப்பாக சிறந்த எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்; உயர்தர நெறியைக் கடைப்பிடிப்பவராக இருத்தல் வேண்டும்.
அதனைக் கருத்தில் கொண்டு தான் சைட் சாடிக் புரிந்த குற்றத்திற்கு, அவருக்கு ஏழாண்டு சிறை, 2 பிரம்படிகள், 10 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
31 வயது சைட் சாடிக்கிற்கு இது முதல் குற்றம்; தவற்றை உணர்ந்து திருந்த அவருக்கு போதிய கால அவகாசம் உண்டு என, தண்டணைக்கான காரணம் குறித்த எழுத்துப்பூர்வ தீர்ப்பில் உயர் நீதிமன்றம் அவ்வாறு கூறியது.
பெர்சாத்து கட்சியிலிருந்த போது, அதன் இளைஞர் பிரிவுக்குச் சொந்தமான 1.12 மில்லியன் ரிங்கிட் நிதியை முறைகேடு செய்தது, நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டது மற்றும் பணச்சலவை செய்தது தொடர்பில், 4 குற்றச்சாட்டுகளில் சைட் சாடிக் குற்றவாளியே என கடந்தாண்டு நவம்பரில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.