ஈப்போ, டிச 3 – பேராவில் உள்ள அனைத்து அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் சர்க்கரை கலந்த பானங்களைத் தடை செய்வதற்கான ஆலோசனை எதிர்வரும் ஆட்சிக்குழு கூட்டத்தில் முன்மொழியப்படும் என பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் A. சிவநேசன் தெரிவித்தார்.
சர்க்கரைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு ஆதரவளிக்கும் ஒரு பகுதியாக இந்த செயல்திட்டம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் இது ஏற்படுத்தும் என மாநில மனித வளம், சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு குழு தலைவருமான சிவநேசன் கூறினார்.
தெலுக் இந்தான் மருத்துவமனையுடன் இதுப் பற்றி விவாதித்துள்ளேன். வெற்றியடைந்தால், அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி , தெலுக் இந்தான் மருத்துவமனை சக்கரை பயன்படுத்தப்படாத மருத்துவமனையாக அறிவிக்கப்படும்.
வெளியில் இருந்து நோயாளிகள் அல்லது பார்வையாளர்கள் யாரும் சக்கரை கலந்த பானங்களை மருத்துவமனைக்கு கொண்டுவருவதற்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் சிவநேசன் தெரிவித்தார்.
இதைச் செயல்படுத்தினால், பெரும்பாலும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்களுக்கு இட்டுச் செல்லும் நீரிழிவு நோய்க்கு எதிரான செயல் திட்டத்தைக் கொண்ட மலேசியாவின் முதல் மாநிலமாக பேராக் மாறும் என அவர் கூறினார்.