குளுவாங், டிசம்பர்-5 – ஜோகூர், குளுவாங், ஃபெல்டா ஆயர் ஹீத்தாமில் சொந்த மகனே கூர்மையான ஆயுதத்தால் தாயின் முதுகில் குத்தி கொலைச் செய்துள்ளான்.
நேற்று காலை 10.45 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தால் அந்த ஃபெல்டா நிலக் குடியேற்றப் பகுதியே அதிர்ச்சியில் மூழ்கியது.
50 வயதிலான மாது தனது வீட்டில் பேச்சு மூச்சின்றி விழுந்துகிடப்பதாக பொது மக்கள் மூலமாக போலீசுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து குளுவாங் என்ச்சே பெசார் ஹஜா கல்சோம் (Hospital Enche’ Besar Hajjah Khalsom) மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட அம்மாது காலை 11 மணி வாக்கில் உயிரிழந்தார்.
20 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் கைதுச் செய்யப்பட்டு விட்ட நிலையில், அவனை விசாரணைக்குத் தடுத்து வைக்க ஏதுவாக இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படவுள்ளது.
கைதான நபருக்குப் பழையக் குற்றப்பதிவுகள் ஏதுமில்லை; சம்பவத்தின் போது போதைப்பொருளும் உட்கொண்டிருக்கவில்லை.
இந்நிலையில் கொலைக்கானக் காரணம் குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் பஹ்ரின் மொஹமட் நோ (Bahrin Mohd Noh) கூறினார்.
சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தும் புகைப்படங்கள் முன்னதாக வைரலாகியிருந்தன.