பாடாங் பெசார், டிசம்பர்-17 – சாடாவில் (Sadao) அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம், மலேசிய-தாய்லாந்து எல்லையான பாடாங் பெசாரில் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு, அச்சுறுத்தல் எதனையும் ஏற்படுத்தவில்லை.
மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் மொஹமட் ஷோக்ரி அப்துல்லா (Mohd Shokri Abdullah) அதனை உறுதிபடுத்தியுள்ளார்.
தாய்லாந்து போலீசின் தகவலின் படி, அத்துப்பாக்கிச் சூடு, எல்லைப் பாதுகாப்புப் பகுதியை நேரடியாகக் குறி வைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
உண்மையில், Dannok-கில் தங்களிடம் காட்டுவதற்காக நண்பர் கொண்டு வந்த கைத்துப்பாக்கிகளைக் கண்ட இரு ஆடவர்கள், ஆர்வ மிகுதியில் அவற்றைப் பரிசோதிக்க முயன்றனர்.
மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு மலேசிய-தாய்லாந்து எல்லையிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் வானை நோக்கி சுட்டிருக்கின்றனர்.
அவர்கள் யாரையும் குறிவைக்கவில்லை; அது ஆர்வக் கோளாறால் நடந்த சம்பவமென தாய்லாந்து போலீஸ் கூறியுள்ளது.
என்ற போதிலும் இருவரையும் கைது செய்த போலீஸ், சுடும் ஆயுதங்களையும் பறிமுதல் செய்தது.
எனவே, எல்லைப் பகுதி பாதுகாப்பு குறித்து யாரும் கவலையடையத் தேவையில்லை என மொஹமட் ஷோக்ரி கேட்டுக் கொண்டார்.
அவ்வாடவர்கள் துப்பாக்கிச் சூட்டைக் கிளப்பும் வீடியோ முன்னதாக வைரலாகி, வலைத்தளவாசிகளிடையே பாதுகாப்புக் குறித்த ஐயத்தை ஏற்படுத்தியிருந்தது.