கோத்தா பாரு, டிசம்பர்-21,கிளந்தானில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, PPS எனப்படும் தற்காலிகத் துயர் துடைப்பு மையத்தில் நிகழ்ந்த ஒரு கற்பழிப்பு உள்ளிட்ட 7 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.
எஞ்சியவை 4 வீடுடைத்துத் திருடியச் சம்பவங்கள், 1 மோட்டார் சைக்கிள் திருட்டு, மற்றொன்று பாலியல் பலாத்காரம் ஆகும்.
மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ மொஹமட் யூசோஃப் மாமாட் (Datuk Mohd Yusoff Mamat) அதனை உறுதிப்படுத்தினார்.
அந்தக் கற்பழிப்புச் சம்பவம், 15 வயது பெண்ணை உட்படுத்தியது.
PPS மையமொன்றில் தஞ்சமடைந்த போது தனக்கு அறிமுகமான 23 வயது இளைஞரால் அங்குள்ள கிடங்கில் அப்பெண் கற்பழிக்கப்பட்டார்.
பெண்ணின் குடும்பத்தார் செய்த போலீஸ் புகாரை அடுத்து, சந்தேக நபர் டிசம்பர் 6-ஆம் தேதி கைதாகி 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டான்.
எனினும் டிசம்பர் 12-ஆம் தேதி கோத்தா பாரு ஷாரியா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட போது, அவன் குற்றத்தை மறுத்தான்.
PPS மையத்தில் கற்பழிப்பு நடந்திருப்பது வெறும் ஒரு சம்பவமே என்றாலும், வயதுக் குறைந்த பிள்ளையை உட்படுத்தியிருப்பதால் அதனைக் கடுமையாகக் கருத வேண்டியுள்ளதாக, டத்தோ யூசோஃப் குறிப்பிட்டார்.