
கோலாலம்பூர், பிப்ரவரி-19 – மோட்டார் வாகன பரிசோதனை மையச் சேவையை வழங்கும் உரிமத்தை, வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியிருப்பதாகக் கூறப்படுவதை, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் மறுத்துள்ளார்.
ஒருவேளை அப்படி நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயர்களை நாங்கள் பகிரங்கமாக அறிவித்திருக்க மாட்டோமே என்றார் அவர்.
முந்தைய அரசாங்கம், நிறுவனங்களை அமர்த்தினால் மக்களவையில் கேட்கப்பட்டாலே ஒழிய வெளியில் வாயைத் திறக்காது.
ஆனால் இந்த மடானி அரசு, யாரும் கேட்காமலேயே அனைத்தையும் அறிவித்து வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்வதாக அவர் சொன்னார்.
PUSPAKOM தவிர, வாகனப் பரிசோதனைச் சேவையை வழங்க மேலும் 3 நிறுவனங்களுக்கு போக்குவரத்து அமைச்சு அங்கீகாரம் வழங்கியதை எதிர்கட்சிகள் சர்ச்சையாக்கியிருப்பது குறித்து டிக் டோக்கில் வெளியிட்ட வீடியோவில் அந்தோனி லோக் அவ்வாறு கூறினார்.
வாகனப் பரிசோதனைச் சேவையை வழங்க இப்புதிய நிறுவனங்களுக்கு அரசாங்கம் எந்தவொரு நிதியுதவியையும் வழங்கவில்லை என்றார் அவர்.
குத்தகையையும் உரிமத்தையும் எதிர்கட்சிகள் குழப்பிக் கொள்வதாக அமைச்சர் சாடினார்.
வாகனப் பரிசோதனை சேவையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக PUSPAKOM தனி ஆவர்த்தனம் செய்து வந்த நிலையில், அதன் ஆதிக்கத்தை உடைத்து போட்டியை உருவாக்கும் முயற்சியில் 3 புதிய நிறுவனங்களுக்கு அரசாங்கம் 24 மாதங்களுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது.