
சிங்கப்பூர், மே-25 – மியன்மார் விவகாரத்தில் ஆசியான் நாடுகளின் நிலைப்பாட்டை ஒருங்கிணைப்பதில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் காட்டும் தீவிரத்தை, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் Dr விவியன் பாலகிருஷ்ணன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
நெருக்கடி மிகுந்த அந்நாட்டை நிர்வகித்து வரும் SAC எனப்படும் தேசிய நிர்வாக மன்றம் மற்றும் NUG எனப்படும் தேசிய ஒற்றுமை அரசாங்கத்துடனும் அன்வார் நேரடி தொடர்பிலிருப்பது பாராட்டுக்குரியது என்றார் அவர்.
இவ்வாண்டு ஆசியான் தலைமைப் பொறுப்பை மலேசியா ஏற்றுள்ள நிலையில், போட்டித் தரப்பான SAC மற்றும் NUG தலைவர்களுடன் கடந்த மாதம் அன்வார் தனித்தனியாகப் பேச்சு நடத்தினார்.
பிறகு வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹசானும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் Maris Sangiampongsa-வும் Naypyidaw சென்று மேற்கொண்டு பேசினர்.
இந்நிலையில், ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையில் நேற்று நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தையின் போது, மியன்மாரில் அமைதியும் நல்லிணக்கமும் மலர வேண்டும் என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
இராணுவப் புரட்சி ஏற்பட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகும் மியன்மாரில் நிலைமை இன்னமும் மோசமாகவே உள்ளது; போதாக்குறைக்கு அண்மைய நில நடுக்கப் பாதிப்பும் அந்நாட்டு மக்களை இன்னலில் ஆழ்த்தியுள்ளது.
மார்ச் மாதம் ஏற்பட்ட அந்த இயற்றைப் பேரிடரே மியன்மாரின் அவலநிலைக்கு சாட்சி என பாலகிருஷ்ணன் சொன்னார்.
மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசியான் நாடுகள் மனிதநேய உதவிகளை அனுப்பினாலும், அதற்கு ஈடாக அரசியல் அவாவும் இணைய வேண்டும்.
ஆசியான் என்னதான் உதவிக் கரம் நீட்டினாலும், நிரந்தர தீர்வு மியன்மார் மக்களிடமிருந்து தான் வர வேண்டுமென, தனது Facebook பக்கத்தில் வெளியிட்ட பதிவில் Dr விவியன் பாலகிருஷ்ணன் மேலும் கூறினார்.