
கோலாலம்பூர், ஜூன் 9 – கடந்த மே 15-ஆம் தேதியன்று மலேசியாவின் சர்வதேச கையிருப்பு 119.1 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து, மே 30-ஆம் தேதி 119.6 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளதென்று பேங்க் நெகாரா மலேசியா (BNM) தெரிவித்துள்ளது.
மலேசிய ரிங்கிட்டின் அடிப்படையில், BNM இன் மொத்த சொத்துக்கள் 627.92 பில்லியன் ரிங்கிட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய இருப்பு, வருகின்ற 5 மாதங்களில், பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதிக்கு நிதியளிக்க போதுமானது என்றும் குறுகிய கால வெளிநாட்டுக் கடனை விட 0.9 மடங்கு அதிகம் என்றும் அறியப்படுகின்றது.
கூடுதலாக, இதில் மத்திய அரசின் வைப்புத்தொகைகள் 5.44 பில்லியன் ரிங்கிட், பிற வைப்புத்தொகைகள் 82.37 பில்லியன் ரிங்கிட், பேங்க் நெகாரா ஆவணங்கள் 10.56 பில்லியன் ரிங்கிட் என்று தேசிய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.