
கோலாலாம்பூர், ஜூலை-4 – இந்தியச் சமூகத்துக்காக இதுநாள் வரை திரை மறைவில் பணியாற்றியதாகக் கூறும் நூருல் இசா அன்வார், அதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.
ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், பிரதமரின் அந்த மூத்த புதல்விக்கு அவ்வாறு சவால் விட்டுள்ளார்.
இந்தியர்களுக்காக யார் மக்கள் பணி செய்தாலும் அது வரவேற்கத்தக்கதே; ஆனால் அதனை திரைக்குப் பின்னாலிருந்து செய்ய வேண்டிய அவசியம் என்ன?
எல்லாவற்றுக்கும் மேலாக, நூருல் இசா யாரோ எவரோ அல்ல, புத்ராஜெயாவில் ஆட்சியில் இருக்கும் கட்சியைச் சேர்ந்தவர்; அவரின் தந்தை இந்நாட்டின் பிரதமர்.
எனவே, அவர் தாரளாமாக வெளிப்படையாகவே மக்கள் பணியாற்றலாம்; திரைக்குப் பின்னாலிருந்து சேவையாற்ற வேண்டிய அவசியம் அவருக்கில்லை என, சரவணன் சுட்டிக் காட்டினார்.
பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் நூருல் இசா, உண்மையிலேயே இந்த இந்தியச் சமூகத்துக்கு சேவை செய்திருந்தால், மெட்ரிகுலேஷன் சர்ச்சையில் என்ன நடந்தது, என்ன பரிந்துரைக்கப்பட்டது என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்.
திரை மறைவில் நூருல் இசா அமைதியாக மேற்கொண்டதாக கூறும் முயற்சிகள் உண்மையான, கண்கூடான பலன்களாக மாறிவிட்டனவா என்பதை இந்தியச் சமூகமே பார்த்து மதிப்பிட்டும் கொள்ளட்டுமென, சரவணன் கூறினார்.
பக்காத்தான் ஆட்சிக்கு வந்த இந்த இரண்டரை ஆண்டுகளில் எந்தவோர் ஆர்ப்பாட்டமும் இல்லாமல் திரைக்குப் பின்னால் மக்கள் பணி, குறிப்பாக இந்தியச் சமூகத்துக்குத் தேவையானதை திட்டமிட்டு செய்து வந்ததாக, நூருல் இசா முன்னதாகக் கூறியிருந்தார்.