
ஜோர்ஜ்டவுன், ஜூலை-7 – பினாங்கு புக்கிட் பெண்டேராவில் சில பிராணிகளும் பறவைகளும் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஷம் கலக்கப்பட்ட தீனிகளை உண்ட 7 நாய்கள், 2 பூனைகள், 5 பறவைகள் கொடி மலையில் செத்துக் கிடந்ததை, பினாங்கு புக்கிட் பெண்டேரா கழகமான PBBPP உறுதிப்படுத்தியது.
இதுவொரு மனிதநேயமற்ற நடவடிக்கையாகும் என்பதோடு, சுற்றுச் சூழல் அமைப்புக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி பொது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும்.
தவிர, கொடி மலையின் நற்தோற்றத்திற்கும் களங்கத்தை ஏற்படுத்துமென, அக்கழகம் அறிக்கையொன்றில் கூறியது.
கைவிடப்பட்ட பிராணிகளை விஷம் வைத்துக் கொள்வதை, எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், சட்டம் 574 என்றழைக்கப்படும் சித்ரவதை சட்டத்தின் கீழ் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
எனவே அச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் inquiries@penanghill.gov.my என்ற மின்னஞ்சல் வாயிலாக அவற்றை அனுப்பி வைக்குமாறு அக்கழகம் கேட்டுக் கொண்டது.
இவ்வேளையில், அச்சம்பவம் குறித்து புகார் கிடைத்திருப்பதை உறுதிப்படுத்திய பினாங்கு கால்நடை சேவைத் துறை, மேற்கொண்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கூறிற்று.