
கோலாலம்பூர் – ஜூலை 15 – நேற்று, சுபாங் ஜெயாவிலுள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில், தனது முன்னாள் காதலியின் கழுத்தை அறுத்த சந்தேக நபரை 4 நாட்கள் தடுப்பு வைத்து விசாரிப்பதற்கு ஷா அலாம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
21 வயதான அந்த வெளிநாட்டு ஆடவன் தனது முன்னாள் காதலியின் மேல் ஏற்பட்ட அதிருப்தியால்தான் இந்தத் தாக்குதலைச் செய்ததாக அறியப்படுகின்றதென்று சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர், வான் அஸ்லான் வான் மமட் கூறியுள்ளார்.
இந்நிலையில் 20 வயது நிரம்பிய அந்த பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண் மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் (PPUM) தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகின்றார்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் மற்றும் சவுக்கடியும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல் தெரிந்த பொதுமக்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.