
கோலாலம்பூர் – ஆகஸ்ட்-30 – 6 தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ள 30 மில்லியன் ரிங்கிட் நிதி, இணைக் கட்டடம், மாற்றுக் கட்டடம் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அதனைத் தெரிவித்தார். பேராக், கிளேபாங் தமிழ்ப் பள்ளி, சிலாங்கூர் North Hummock தோட்டத் தமிழ்ப் பள்ளி, ஜோகூர் கூலாய் பெசார் தோட்டத் தமிழ்ப் பள்ளி, ஜோகூர் ரினி தோட்டத் தமிழ்ப் பள்ளி, பேராக் YMHA தமிழ்ப் பள்ளி, பினாங்கு சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளி ஆகியவையே அந்த 6 தமிழ்ப் பள்ளிகளாகும்.
இப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டங்கள் திறந்த குத்தகை முறையில் வெளிப்படையாகவும், விரைவாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்; அதுவே பிரதரின் விருப்பமும் கூட என, இந்துக் கோயில்கள் மற்றும் தமிழ்ப் பள்ளிகள் விவகாரத்தைக் கண்காணிக்கும் கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ள ரமணன் சொன்னார்.
இது குறித்து கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக்குடன் கடந்த வாரம் அவர் கலந்துபேசியுள்ளார். இந்த 30 மில்லியன் ரிங்கிட் நிதியின் செயலாக்கக் கூட்டத்திற்குத் தலைமையேற்றப் பிறகு ரமணன் அவ்வாறு கூறினார்.
கல்வித் துணையமைச்சர் வோங் கா வோ (Wong Kah Woh), கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோரும் அதில் பங்கேற்றனர். அடுத்தக் கூட்டத்தில் அந்த 6 தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாளர் வாரிய உறுப்பினர்களும் பங்கேற்பர் என ரமணன் தெரிவித்தார்.