மலேசியாவுக்கு கடத்தப்பட்ட மகன் குறித்து தகவல் தருவோருக்கு RM50,000 சன்மானம்; சிங்கப்பூர் தாய் அறிவிப்பு

சிங்கப்பூர், செப்டம்பர்-21,
கியூபாவில் பிறந்த சிங்கப்பூர் தாய் Daylin Limonte Alvarez, தனது 7 வயது மகன் Caleb Liang Wei Luqman Limonte-வைத் தேட பொது மக்களின் உதவியைக் கோருகிறார்.
தனது முன்னாள் கணவர் கடந்தாண்டு குழந்தையை மலேசியாவுக்கு கடத்திச் சென்று விட்டதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.
இது குறித்து நம்பகமான தகவல் வழங்குவோருக்கு RM50,000 ரிங்கிட் சன்மானம் வழங்குவதாகவும் Daylin அறிவித்துள்ளார்.
மலேசிய போலீஸ் ஆகஸ்டில் Nur Alert எனும் அவசர எச்சரிக்கையை வெளியிட்டிருந்தாலும், முன்னாள் கணவர் Luqman Liang Hsien Masood-டின் கைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் செயலற்ற நிலையில் இருப்பதால், அவரைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அனைத்துலக போலீஸான Interpol வழியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையிலும் முன்னேற்றம் இல்லையென Daylin குறிப்பிட்டார்.
மகன் Luqman Limonte-வை கடைசியாக 2023 மே 25-ஆம் தேதி சிங்கப்பூரில் Daylin பார்த்துள்ளார்.
ஆனால், குழந்தையைத் திருப்பிக் கொடுக்காமல், Luqman மலேசியாவுக்கு கொண்டு சென்று விட்டார்.
அவர்களது விசா ஒரு மாதத்தில் காலாவதியானாலும், நாட்டை விட்டு வெளியேறிய தடயங்கள் இல்லை.
இந்நிலையில், சிங்கப்பூர் மற்றும் ஜோகூர் பாரு நீதிமன்றங்கள் குழந்தையை பாதுகாக்கும் முழு உரிமையை Daylin-னுக்கு வழங்கியுள்ளது அவருக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது.
பல தடைகள் இருந்தாலும், மகன் இன்னும் மலேசியாவில் இருப்பான் என்ற நம்பிக்கையில் Daylin தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறார்.
Luqman Limonte அல்லது அவனது தந்தையின் இருப்பிடம் குறித்து தகவல் உள்ளவர்கள், இச்சம்பவம் பற்றிய விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்ட இணையதளம் வழியாக Daylin-னை தொடர்புகொள்ளலாம்.
அல்லது விசாரணை அதிகாரி ராதியாவை +60 13-566 5710 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என Malaysia Kini செய்தி வெளியிட்டுள்ளது.