Latestமலேசியா

மக்களை மையப்படுத்திய பட்ஜெட்; அக்கறையோடு இந்தியச் சமூகத்தை வலுப்படுத்தும் பட்ஜெட்: ரமணன் மகிழ்ச்சி

 

கோலாலம்பூர், அக்டோபர்-11,

பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சமர்ப்பித்த 2026 மடானி பட்ஜெட், எந்தச் சமூகமும் பின்தங்காத வகையில் திட்டமிடப்பட்ட உண்மையான ‘மக்கள் பட்ஜெட்’ என டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.

மொத்தம் RM419 பில்லியன் ஒதுக்கீட்டுடன், தொழில்முனைவு, கல்வி, மக்கள் நலத் திட்டங்கள் போன்ற துறைகள் அதில் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சருமான அவர் சொன்னார்.

குறிப்பாக இந்தியச் சமூக முன்னேற்றத்துக்காக மித்ரா, தெக்குன் நேஷனல் மற்றும் அமானா இக்தியார் மலேசியா மூலம் RM220 மில்லியன் வழங்கப்படுவது பெரிய முன்னேற்றம் என்றார் அவர்.

தீபாவளியை முன்னிட்டு STR ரொக்க உதவியை முன்கூட்டியே வழங்குவது, தீபாவளிக்கு 50% டோல் கட்டணச் சலுகை வழங்குவது, அத்தியாவசியப் பொருட்களை வாங்க உதவும் 100 ரிங்கிட் SARA உதவியை வரும் பிப்ரவரியில் இரண்டாவது முறையாக வழங்குவது போன்ற, மக்கள் நலனை முன்வைக்கும் முடிவுகளை அவர் பாராட்டினார்.

சிறு தொழில்முனைவோருக்காக TEKUN மற்றும் BSN மூலம் RM2.5 பில்லியன் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதும், SJKP வீட்டுக் கடன் உத்தரவாதம் RM1.9 பில்லியனாக உயர்த்தப்பட்டதும் இந்தியக் குடும்பங்களுக்கு ஆதரவாக உள்ளது என, பி.கே. ஆர் உதவித் தலைவருமான ரமணன் சொன்னார்.

கல்வித் துறையில் பஹாங், ஜெராம் தோட்டத் தமிழ்ப் பள்ளிக் கட்டப்படுவது, தமிழ்ப் பள்ளிகள் உட்பட மோசமான நிலையில் உள்ள 520 பள்ளிகளைப் பராமரிக்க RM2 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுவதையும் அவர் வரவேற்றார்.

“இது சமூக நீதி, சமத்துவம், மற்றும் ஒற்றுமையை பிரதிபலிக்கும் மடானி அரசாங்கத்தின் உறுதியான சான்று,” என ரமணன் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!