
கோலாலம்பூர், அக்டோபர்-15,
அண்மைய காலமாக பள்ளிகளில் அடுத்தடுத்து நிகழும் மாணவர் கொலை, தற்கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து, ம.இ.கா இளைஞர் பிரிவும் இளைஞர் பணிப்படையும் கடும் அதிருப்தியும் கவலையும் தெரிவித்துள்ளன.
பிரிகேட் MIC பணிப்படைத் தலைவர் ஆண்ட்ரூ டேவிட், நேற்று பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் நடந்த மாணவர் கொலை சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.
“மாணவர்கள் மத்தியில் குற்றச்செயல்கள் அதிகரிப்பது ஆபத்தான போக்கைக் குறிக்கிறது; எனவே வயது குறைந்த குற்றவாளிகளுக்கும் இனி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என அண்ட்ரூ கேட்டுக் கொண்டார்.
‘குற்றச்செயல்களை எதிர்க்கும் தலைமுறை’_ எனும் பிரச்சாரத்தின் கீழ், பிரிகேட் MIC பணிப்படை, பள்ளி மாணவர்களுக்கு குற்றவியல் விழிப்புணர்வு மற்றும் ஆலோசக உதவிகளை வழங்கும் என்றும் அவர் சொன்னார்.
இவ்வேளையில்“பள்ளி என்பது பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும்; பயமும் துயரமும் நிறைந்த இடமாக அல்ல”_ என தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் வலியுறுத்தினார்.
நடப்பவை அனைத்தும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால், மனநல பரிசோதனை, மாணவர் பாதுகாப்பு வழிகாட்டி, மற்றும் போலீஸ் கண்காணிப்பு போன்ற அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சை அவர் வலியுறுத்தினார்.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு அனைவரது கடமை என்றும் இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
எல்லை மீறும் பகடிவதை, SPM மாணவர் தற்கொலை, பள்ளி வகுப்பறையில் சக மாணவர்களால் மாணவி கற்பழிப்பு, கத்தியால் குத்திக் கொலை என அண்மைய காலமாக பள்ளிகளில் நடக்கும் சம்பவங்கள் ஒட்டுமொத்த மலேசியர்களையும் கடும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த கவலையிலும் ஆழ்த்தியுள்ளன.
பள்ளி வளாகம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரது எதிர்பார்ப்பாகும்.