
ஜோகூர் பாரு, அக்டோபர்- 17
ஜோகூர் ரினி தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான உயர்க்கல்வியை நோக்கி முதல்படி மற்றும் தன்முனைப்பு நிகழ்வு அண்மையில் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக மண்டபத்தில் காலை மணி 8.00 தொடங்கி மதியம் மணி 12.00 வரை சிறப்பாக நடந்தேறியது. அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரிய சங்கமும், இஸ்கந்தார் புத்திரி மாநகர மன்ற இயக்கமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இடைநிலைப்பள்ளியில் கால் பதிக்கவிருக்கும் ஆறாம் ஆண்டு மாணவ மணிகள் தேசிய மொழியில் புலமை பெற வேண்டி பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்ட திருமதி அஸ்லிண்டா முகமது கோரிப் மற்றும் திருமதி சித்தி ஹட்ஜா முகமது யாசக் ஆகியோர் இந்நிகழ்வினை நன்முறையில் வழிநடத்தினர். மேலும், பேராசிரியர் டாக்டர். சத்தியசீலன் ‘உன்னையே நீ தேடு’ எனும் கருப்பொருளில் மாணவர்களுக்குச் சிறந்ததொரு தன்முனைப்பு உரையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்த ஜோகூர் மாநில பாலர் பள்ளிகள், ஆரம்பப்பள்ளிகளுக்கான உதவி இயக்குநரும் மற்றும் ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளருமான இரா.இரவிச்சந்திரன் , கல்வித்தவணை இறுதித் தேர்வினை எதிர்நோக்கவிருக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் பதிலளித்துச் சிறப்பான தேர்ச்சியினைப் பெறவேண்டும் என வாழ்த்தினார். இடைநிலைப்பள்ளியில் கால் பதிக்கவிருக்கும் ஆறாம் ஆண்டு மாணவ மணிகளைத் தயார்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும் என பள்ளியின் தலைமையாசிரியை திருமதி சு.தமிழ்ச்செல்வி தனதுரையில் தெரிவித்தார். இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற துணைநின்ற துணைத்தலைமையாசிரியர்கள் உட்பட அனைவருக்கும் தமிழ்ச் செல்வி நன்றியை தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.