
ஷா ஆலாம், நவம்பர்-2,
சிலாங்கூரில் குறைந்த வருமானம் பெறும் B40 குடும்பங்களைச் சேர்ந்த 12,500 மாணவர்களுக்கு, வரும் வாரம் தொடங்கி Influenza தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும்.
அதிக சம்பவங்களைப் பதிவுச் செய்த பெட்டாலிங், கிள்ளான், கோம்பாக், உலு லங்காட் ஆகிய 4 மாவட்டங்களில் இந்தத் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும்.
இதற்காக RM1 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
குழந்தைகள், Influenza தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதிச் செய்வதோடு, சமூகத்தில் அதன் பரவலைக் குறைப்பதும் இதன் நோக்கமாகும் என்றார் அவர்.
ஏற்கனவே ஒரே தடுப்பூசியைப் பெற்றவர்களைத் தவிர, 8 வயது மற்றும் அதற்கு கீழ்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் 2 டோஸ் Influenza தடுப்பூசியை மாநில சுகாதாரத் துறை பரிந்துரைத்துள்ளது.
பள்ளிகளுக்குக் குழுக்களை அனுப்பி தடுப்பூசி போடுதல், கிளினிக்குகளில் walk in முறையில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் என 2 முறைகள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
கிளினிக் செல்வதற்கு முன் பெற்றோர்கள் SELangkah செயலியில் பதிந்துகொள்வது அவசியமாகும் என ஜமாலியா மேலும் கூறினார்.



