Latestமலேசியா

சிங்கப்பூர் எல்லை தாண்டும் 4 லட்சம் மலேசியர்களுக்கு புதிய பாதுகாப்பு: ரமணன் அதிரடி அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா, பிப். 5-சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் தங்களின் தினசரி எல்லைத் தாண்டிய பயணங்களின் போதும் காப்பீடு செய்யப்படுவதை உறுதி செய்ய புதிய காப்பீட்டுத் திட்டம் ஒன்று உருவாக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜோகூரிலிருந்து தினமும் எல்லை தாண்டிச் செல்லும் சுமார் 400,000 மலேசியர்கள், வேலை நேரத்திற்குப் பிறகு சமூகப் பாதுகாப்பிலிருந்து விடுபடாமல் இருப்பதை இந்தப் புதிய திட்டம் உறுதி செய்யும்.

“உங்கள் பணியிடத்திலிருந்து வீட்டிற்குப் பயணம் செய்யும்போது என்ன நடக்கும்?… அந்த நேரத்தில் காப்பீடு எங்கே இருக்கிறது? அந்தப் பாதுகாப்பு தற்போது வழங்கப்படவில்லை, எனவே மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே முன்னும் பின்னும் செல்லும் தொழிலாளர்களுக்காக நாங்கள் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வருகிறோம்,” என்று ரமணன் ஆங்கில நாழிதழுக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்தார்.

டிசம்பர் மாதம் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டம் தனது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று என்றும் அவர் மேலும் கூறினார். “சிங்கப்பூரில் பணிபுரிகிறார்கள் என்பதற்காக தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடாது. நீங்கள் மலேசியாவைச் சேர்ந்தவராக இருக்கும் வரை, அதே தரத்திலான பாதுகாப்பு உங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

சுமார் 1.18 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் சிங்கப்பூரில் பணிபுரிகின்றனர் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 300,000 முதல் 400,000 பேர் தினமும் எல்லை கடந்து பயணம் செய்கின்றனர்.

அனைத்துலக தொழிலாளர் அமைப்பின் (ILO) தரநிலைகளுக்கு ஏற்ப 26 தொடர்புடைய சட்டங்கள் திருத்தப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக வேலைவாய்ப்பு காப்பீட்டு முறை (SIP) சட்டத் திருத்தம் 2025 இறுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்றும் ரமணன் கூறினார்.

இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையினரின் கருத்துக்களைப் பெற இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் (Moratorium) வழங்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார். “நாங்கள் தொழிலாளர்களுக்காக இருக்க வேண்டும், அதே நேரத்தில் முதலாளிகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் அதிகமாக நெருக்கப்பட்டால், தொழிலாளர்கள் வேலையை இழக்க நேரிடும்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

SIP திட்டத்தின் நன்மைகளைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், முதலாளிகள் மிகச் சிறிய தொகையையே பங்களிப்பாகச் செலுத்துவார்கள் என்றார். “இது ஒரு நாளைக்கு 40 அல்லது 50 காசு என்று வைத்துக்கொண்டால், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க இது மிகக் குறைந்த விலையல்லவா? விபத்து ஏற்படும்போது குடும்பங்கள் பணமில்லாமல் தவிப்பதைத் தவிர்க்க இது உதவும்,” என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த நவம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி, வேலை இழந்த 69,923 பேரில் மொத்தம் 57,094 தொழிலாளர்கள், அதாவது 85.3 விழுக்காட்டினர், கடந்த ஐந்து ஆண்டுகளில் RM437.19 மில்லியன் மதிப்பிலான பல்வேறு SIP (வேலைவாய்ப்பு காப்பீடு) பலன்களைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!