Latestஇந்தியாமலேசியா

இந்தியாவின் UPI விரைவில் மலேசியச் சந்தையில் அறிமுகம்; மோடி அறிவிப்பு

இந்தியாவின் UPI விரைவில் மலேசியச் சந்தையில் அறிமுகம்; மோடி அறிவிப்பு

கோலாலம்பூர், பிப்ரவரி-8,

இந்தியாவின் Unified Payments Interface அல்லது UPI எனப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை விரைவில் மலேசியச் சந்தையில் அறிமுகமாகும்.

இரு-நாள் அலுவல் பயணமாக கோலாலம்பூர் வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதனை அறிவித்துள்ளார்.

இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் UPI, நிகழ்நேர பணப் பரிமாற்றத் தொழில்நுட்பமாகும்.

இது, ஒரே கைப்பேசி செயலி மூலம் பல வங்கிக் கணக்குகளை இணைத்து, உடனடியாகப் பணம் அனுப்பவும், பெறவும், கட்டணம் செலுத்தவும் உதவுகிறது.

இது பாதுகாப்பான, விரைவான, ரொக்கமில்லா பரிவர்த்தனைகளுக்கான முக்கியக் கருவியாக உள்ளது.

இந்நிலையில், மலேசியாவில் இந்த UPI முறை அறிமுகம் காண்பது, இந்திய–மலேசிய நிதி ஒத்துழைப்பில் புதிய அத்தியாயமாக அமையும் என, மோடி குறிப்பிட்டார்.

இதனால் இந்திய வம்சாவளியினர், சுற்றுலாப் பயணிகள் மற்றும் இரு நாடுகளிலும் வியாபாரம் செய்பவர்கள் அதிகம் பயனடைவார்கள் என்றார் அவர்.

இம்முயற்சி, மலேசியாவின் DuitNow போன்ற உள்ளூர் தளங்களுடன் இணைந்து, எல்லைகடந்த பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக்கும்.

UPI-யின் விரிவாக்கம் இந்தியாவின் உலகளாவிய நிதித் தொழில்நுட்ப ஆற்றலை வெளிப்படுத்தும் அதே வேளை, மலேசியாவுக்கு புத்தாக்கத் பலனையும் கட்டண முறையில் உள்ளூர் பயனீட்டாளர்களுக்கு கூடுதல் தேர்வுகளையும் வழங்குவதாகவும் மோடி தெரிவித்தார்.

நூறுக்கும் மேற்பட்ட இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மலேசியாவில் இயங்கி வருவதோடு ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே இந்திய-மலேசிய வியூகப் பங்காளித்துவம் ‘IMPACT’ அதாவது மேம்பட்ட கூட்டு உருமாற்றத்தின் அடிப்படையில் அடுத்தக் கட்டத்திற்குச் செல்லும்.

_”இந்தியாவின் வெற்றி மலேசியாவின் வெற்றியாகும்; மலேசியாவின் வெற்றி ஆசியாவின் வெற்றியாகும்”_ என்றார் அவர்.

மலேசியப் பயணத்தின் முதல் அங்கமாக கோலாலம்பூரில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றுகையில் பிரதமர் மோடி அவ்வாறுக் கூறினார்.

‘Selamat Datang Modi Ji’ எனும் அந்நிகழ்வில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இரு நாட்டு உயரதிகாரிகள் உள்ளிட்ட பத்தாயிரதேதிற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மோடியை வரவேற்கும் வகையில் 800-க்கும் மேற்பட்ட நடமணிகள் இணைந்து ‘ஸ்வாகதம்’ நடனத்தை வழங்கி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இரு நாட்டு கலாச்சார அம்சங்களோடு நடைபெற்ற இந்நிகழ்வில் மோடி-அன்வார் மேடையில் ஆரத்தழுவி தங்களின் நட்பைப் பறைசாற்றினர்.

மோடி பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, இரு தரப்பு அதிகாரப்பூர்வ சந்திப்புகளும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவிருக்கின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!