
அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் 80-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற மலேசிய மாணவர்கள்: ரமணன் பாராட்டு
கோலாலம்பூர், பிப்ரவரி-11,
அனைத்துலக அளவில் நடைபெற்ற ‘உலக ரோபோ விளையாட்டுப் போட்டியில்’ (World Robot Games 2025) பங்கேற்று, 80-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த 24 மலேசிய மாணவர்களை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் நேற்று நாடாளுமன்றத்தில் சந்தித்துப் பாராட்டினார்.
நாட்டின் 13 பள்ளிகளைப் பிரதிநிதித்துச் சென்ற இந்த மாணவர்கள், ரோபோட்டிக் மற்றும் ‘ஸ்டெம்’ (STEM) – (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) துறையில் தங்களின் அபார திறமையை வெளிப்படுத்தி உலக அரங்கில் மலேசியாவின் பெயரை ஓங்கச் செய்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய ரோபோட்டிக் தளங்களில் ஒன்றான இப்போட்டியில் தைவான், ஜப்பான், தென்கொரியா, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் மலேசியா உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போட்டியில் பங்கேற்ற மலேசிய மாணவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு பதக்கத்தையாவது வென்றுள்ளனர் என்றும், இது கடந்த ஆண்டை விட மிகச் சிறந்த முன்னேற்றம் என்றும் அமைச்சர் ரமணன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
“நமது மாணவர்கள் சர்வதேச அளவில் இவ்வளவு பெரிய சாதனையைப் படைத்திருப்பது எனக்கு மிகுந்த பெருமையளிக்கிறது,” என்று அவர் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்தச் சாதனையில் 13 வயதான கே. சச்சின் என்ற மாணவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தனது 5 வயதிலிருந்தே ரோபோ உருவாக்கம் மற்றும் அதன் மென்பொருள் நுணுக்கங்களைக் கற்கத் தொடங்கிய இவர், கடந்த 8 ஆண்டுகால தொடர் பயிற்சியின் மூலம் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.
மாணவர்களின் இந்த வெற்றி மலேசியாவின் ‘ஸ்டெம்’ கல்வி முறையின் வலிமையைக் காட்டுவதாகவும், முறையான பயிற்சியும் வாய்ப்பும் வழங்கப்பட்டால் நமது மாணவர்கள் உலகத் தரத்திற்குப் போட்டியிட முடியும் என்பதை இது நிரூபிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.



