
மூவாரில் குடிநுழைவு சட்ட மீறல்: 26 வெளிநாட்டவர்கள் கைது
மூவார், பிப்ரவரி 13 –
நேற்று முன்தினம் காலை, ஜோகூர் மாநில குடிநுழைவுத் துறையின் மூவார் கிளை மற்றும் காவல் துறையினர் இணைந்து நடத்திய ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில், பல்வேறு குடிநுழைவு சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 26 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜோகூர் மாநில குடிநுழைவுத் துறையின் இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் (Datuk Mohd Rusdi Mohd Darus) தெரிவித்ததன்படி, கைது செய்யப்பட்டவர்களில் 21 ஆண்களும் 5 பெண்களும் உள்ளடங்குவர். இவர்களின் வயது 19 முதல் 48 வரை ஆகும் என்றும் கைது செய்யப்பட்ட அனைவரும் மியான்மார், நேபாளம், வங்காளதேசம் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அறியப்படுகின்றது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மேல் விசாரணைக்காக செத்தியா ட்ரோப்பிக்கா (Setia Tropika) குடிநுழைவுத் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைக்கு ஆதாரங்கள் திரட்டுவதற்காக ‘போராங் 29’ (Borang 29) எனப்படும் ஐந்து சாட்சி சம்மன் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோதமாக நாட்டில் தங்குதல் மற்றும் அனுமதி ஆவணங்களை தவறாக பயன்படுத்துதல் போன்ற குற்றங்களுக்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும், சந்தேகத்திற்கிடமான எந்த செயல்பாடுகளையும் பொதுமக்கள் உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



