Latestமலேசியா

நான் இப்போது சுதந்திர மனிதன்; என் பின்னால் 18 பெர்சாத்து எம்.பிக்கள் – ஹம்சா முழக்கம்

நான் இப்போது சுதந்திர மனிதன்; என் பின்னால் 18 பெர்சாத்து எம்.பிக்கள் – ஹம்சா முழக்கம்

கோலாலம்பூர், பிப்ரவரி-15,

_“நான் இப்போது சுதந்திரமான மனிதன்”_ என, பெர்சாத்துவில் இருந்து நீக்கப்பட்ட அதன் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் அறிவித்துள்ளார்.

கட்சியின் கட்டொழுங்கு வாரியத்தால் நீக்கப்பட்ட பிறகு, அடுத்த அரசியல் திசை குறித்து கோலாலம்பூரில் நடந்த ‘Reset’ கூட்டத்திற்குப் பிறகு அவர் பேசினார்.

தற்போது தாம் சுயேட்சை எம்.பி என்றாலும், பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி.க்களில் பெரும்பான்மையான ஆதரவு தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறிக் கொண்டார்.

அதே போல் பெர்சாத்துவின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 18 பேர் தன்னுடன் இருப்பதாகவும் அவர் முழங்கினார்.

இது, அவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதை குறிக்கவில்லை, மாறாக எதிர்கால திட்டங்களுக்கு வலுவான ஆதரவாக இருக்கும் என அவர் சொன்னார்.

மலேசியர்களுக்கான புதியப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகக் கூறிய ஹம்சா, புதிய கட்சி அமைப்பது அல்லது பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்குள்ளேயே நீடிப்பது ஆகிய தேர்வுகள் திறந்தவையாக வைத்திருப்பதாகவும் அவர் சொன்னார்.

ஆனால் பெர்ஜாசா கட்சியில் சேரும் வாய்ப்பை அவர் நிராகரித்தார்.

ஏற்கனவே 16 எம்.பி.க்கள், தான் ஸ்ரீ முஹிடின் யாசின் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகி, ஹம்சாவிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

அப்பட்டியலில் இடம்பெறாத பெர்சாத்து மகளிர் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கூட நேற்று ஹம்சாவுக்கு ஆதரவாக கூட்டத்தில் பங்கேற்றார்.

இதனால், முஹிடின் பின்னால் சொற்ப எம்.பிக்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

இந்நிலையில் பாஸ் கட்சி எம்.பிகளின் ஆதரவுடன் ஹம்சா நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவராகத் தொடரலாம் எனக் கூறப்படுகிறது.

_”இனி முஹிடினுக்கு நான் தான் முதல் எதிரி”_ என்றும் ஹம்சா முழங்கியிருப்பது இப்பிரச்னை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!