
சோல் , பிப் 23 – வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், ( Kim Jong Un ) ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைமைச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அரசாங்க ஊடகங்கள் தெரிவித்தன. இந்த முடிவு ஞாயிற்றுக்கிழமை – மாநாட்டின் நான்காவது நாளில் அனைத்து பிரதிநிதிகளின் ஒருமித்த விருப்பத்திற்கு இணங்க எடுக்கப்பட்டது என்று கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிம் தலைமையின் கீழ் ,அணுசக்திகளை மையமாகக் கொண்ட நாட்டின் போர் தடுப்பு தீவிரமாக மேம்படுத்தப்பட்டுள்ளது என அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் கட்சி மாநாடு, சாதாரண விவரங்கள் கூட ரகசியமாக மறைக்கப்பட்ட ஒரு நாட்டின் செயல்பாடுகள் குறித்த அரிய பார்வையை வழங்குகிறது.
வீடு கட்டுவது முதல் போர் திட்டமிடல் வரை அனைத்திலும் அரசின் முயற்சிகளை இந்தக் கூட்டம் வழிநடத்துகிறது.
வியாழக்கிழமை மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றிய கிம், பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்ட தனது நாட்டைப் பாதிக்கும் நெருக்கடிகளை சுட்டிக்காட்டி , வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக உறுதியளித்தார். பல ஆண்டுகளாக உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு , பஞ்சம் நிலவியபோதும், வட கொரியாவில் அணு ஆயுதங்களுக்கும் இராணுவ வலிமைக்கும் எப்போதும் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தன.
2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து,வட கொரியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை கிம் வலியுறுத்தியுள்ளார்.



